கந்துவட்டி தகராறு – எண்ணெய் விநியோக மையத்தில் புகுந்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கந்துவட்டி தொடர்பான தகராறில், எண்ணெய் விநியோக அலுவலகம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் ராஜேஷ் என்பவர் நடத்தி வரும் எண்ணெய் விநியோக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர் நந்தகுமார் மற்றும் புவனேஷ் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
வட்டித் தொகை அதிகமாக இருந்ததால், கடனை முறையாக திருப்பி செலுத்த முடியாமல் ராஜேஷ் தவித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நந்தகுமார் மற்றும் புவனேஷ் தங்களுடன் சிலரை அழைத்து வந்து, அந்த எண்ணெய் அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக அலுவலக உரிமையாளர் ராஜேஷ் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, எண்ணெய் விநியோக அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த தொலைபேசியை உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வெளியான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்