முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வடக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோயிலில், பாரம்பரியமான பிரியாணி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அந்த மரபின்படி இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவின் தொடக்கமாக, கோயிலின் நிலைமாலை மேளதாள இசையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ச்சியுடன் கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் முனியாண்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கான படையலுக்காக 150 ஆடுகளும், 300-க்கும் அதிகமான கோழிகளும் பலியிடப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டது.
சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பின், தயாரான பிரியாணி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைப் பெற பக்தர்கள் ஆர்வமுடன் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.