சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று பெண்ணின் கிட்னி விற்பனை – அதிர்ச்சி தகவல் வெளியே!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, அவரது சிறுநீரகத்தை அகற்றி விற்பனை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் கடன் சுமையில் சிக்கிய ஏழை மக்களை குறிவைத்து, கிட்னி கடத்தல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிறுநீரகத்தை அகற்றிய பிறகு, முன் ஒப்பந்தப்படி பணம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், சேலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ஜவுளி தொழிலதிபருக்காகவே தனது கிட்னி எடுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வறுமை நிலையை பயன்படுத்தி, அந்த பெண்ணை மனநல ரீதியாக கட்டுப்படுத்தி, பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தை அகற்றியதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை வழங்காமல் தன்னை விரட்டி விட்டதாகவும், தனது பாஸ்போர்ட்டையும் திருப்பி வழங்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.