பாரத ஒற்றுமைக்கு சர்தார் வல்லபாய் படேலின் பங்கு முக்கியம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரதம் இன்று ஒன்றுபட்ட நாடாக இருக்க சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பே அடிப்படை காரணம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் விழா தொடர்பான கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்தக் கண்காட்சி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை பார்வையிட்ட பின் பேசிய ஆளுநர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரம் பாடல் மிக முக்கிய பங்காற்றியதாக கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு அந்தப் பாடல் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போது மாணவர்கள் மத்தியில் வந்தே மாதரம் பாடல் மீண்டும் பாடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், சர்தார் வல்லபாய் படேல் எப்போதும் ஒன்றுபட்ட பாரதத்தை மட்டுமே விரும்பியவர் என கூறிய ஆளுநர், இன்று இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதற்கு அவரது உறுதியான நடவடிக்கைகளே காரணம் என விளக்கினார். 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, சர்தார் வல்லபாய் படேலின் சிந்தனைகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.