அரசுப் பணிகளில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி முன்னுரிமை
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, அரசுப் பணிகளுக்கு இனி புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி கற்றமைக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான சட்ட முன்மொழிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் விளக்கத்தை தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த மசோதாவில், 2010ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை தமிழ் வழிக் கல்வி முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், அரசுப் பணிகளில் புதிதாக சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தமிழ் வழியில் கல்வி கற்றமைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், அதிக ஊதியம் பெறும் பதவிகளில் உள்ள குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் சட்டமுன்வடிவில் விளக்கப்பட்டுள்ளது.