நாங்கள் அனைவரும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் தொண்டர்களே – எதிரிகள் இதை மறந்துள்ளனர்: டிடிவி தினகரன்
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அமைப்பதே எங்களின் இலக்கு என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் இருந்த முரண்பாடுகள் அனைத்தும் குடும்பத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே என்றும், அந்த மனவருத்தங்கள் இப்போது முழுமையாக நீங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் அனைவரும் எம்ஜிஆர் தொடங்கிய அரசியல் பாதையில் பயணிப்பவர்கள், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் என்றும் தினகரன் வலியுறுத்தினார். மனதில் இருந்த கோபம், கசப்பு, வேதனை ஆகிய அனைத்தையும் புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
முன்பு எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் தமிழக மக்கள் நலனையும், அமமுக எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இப்போது ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சிக்கு முடிவுகட்டாமல் ஓயமாட்டோம் என்றும், அந்த இலக்கை அடைவதற்காகவே இந்த அரசியல் பயணம் என்றும் தினகரன் கூறினார்.
எதிரிகள், நாங்கள் அனைவரும் ஜெயலலிதாவின் கொள்கையில் வளர்ந்த தொண்டர்கள் என்பதை மறந்து விட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தனிப்பட்ட பங்காளி சண்டைகளை ஒதுக்கி வைத்து, மக்கள் நலனுக்காக முழு மனதோடு கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.