கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கனரக லாரிகள் விதிமுறைகளை மீறுவதாக புகார்
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை கடத்திச் செல்லும் கனரக வாகனங்கள், அரசு நிர்ணயித்த சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு நேர வரம்பு, சரக்கு எடை வரம்பு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விதிமுறைகள் நடப்பில் கடைபிடிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கனிம வள வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் நிபந்தனைகள் விதித்துள்ளது. ஆனால் அவற்றையும் மீறி, சில லாரிகள் அதிக அளவு பாரம் ஏற்றிக்கொண்டு பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
மேலும், அதிக எடை ஏற்றிச் செல்லும் போது அனைத்து டயர்களும் சாலையைத் தொட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையிலும், சில வாகனங்கள் ஒருசில டயர்களை உயர்த்திக் கொண்டு இயக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.
இந்த முறையற்ற நடைமுறையால் விபத்து அபாயங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி வருவதாகவும், எனவே கனிம வள வாகனங்களின் இயக்கத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
அதே நேரத்தில், இவ்விதிமீறல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாகப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.