சைவம், வைணவம் குறித்த சர்ச்சைக் கருத்து: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பொன்முடி வெறுப்பூட்டும் பேச்சு ஆற்றியதாகவும், அவரது உரை மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மத வெறுப்பு தூண்டல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் அவருக்கு தண்டனை வழங்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.