திருப்பூரில் வைரமுத்து நிகழ்ச்சியில் பரபரப்பு – வரவேற்பு நிகழ்வின்போது காலணி வீச்சு
திருப்பூருக்கு வந்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சாலையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அந்த பெண்ணை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தனது கோரிக்கைகள் எந்த அரசாலும் நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தால், இதுபோன்ற போராட்டங்களில் அவர் அடிக்கடி ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொங்கு கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவையின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள, கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்போது, முன்னதாக தர்ணாவில் ஈடுபட்டிருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண், திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழற்றி, வரவேற்பு நிகழ்வில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக, அந்த செருப்பு வைரமுத்துவை தாக்காமல் அருகே விழுந்தது.
இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், வைரமுத்துவை பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.