தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் மீண்டும் பொருட்கள் பெறலாம்
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் மீண்டும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் “ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை” திட்டத்தில் தமிழகம் 2020ஆம் ஆண்டில் இணைந்தது. இந்த திட்டத்தின் மூலம், புலம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட, ரேஷன் அட்டையாளர் அனைவரும் மாநிலத்தின் எந்த பகுதியிலுள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
எனினும், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகள் காரணமாக, ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு இணைக்கப்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த சிறப்பு விநியோக நடவடிக்கைகள் தற்போது 97 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதால், மீண்டும் வழக்கமான நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.