தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் அறிவிப்பு
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு தவெக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த மனுவில், விசில், ஆட்டோ, கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை உள்ளிட்ட பத்து விருப்ப சின்னங்கள் குறிப்பிடப்பட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில், தவெகவுக்கு விசில் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தவெக தற்போது அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணைய விதிகளின் படி தேவையான கணக்குகள் மற்றும் ஆவணங்களை முறையாக சமர்ப்பித்துள்ளதால், பொதுச் சின்னம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு, ஏற்கனவே பயன்படுத்தி வந்த டார்ச்லைட் (மின்விளக்கு) சின்னமே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.