அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே, ‘குலவிளக்கு’ போன்ற மக்கள் நலத் திட்டங்களை அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்ததாக அவர் நினைவூட்டினார். எனவே, திமுக அறிவிக்கும் திட்டங்களை அதிமுக நகலெடுக்க வேண்டிய நிலை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் முன்பாகவே அதிமுக தான் முதன்முதலில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையிலேயே குலவிளக்கு திட்டம் தெளிவாக இடம் பெற்றிருந்தது என்றும், இதை மறைத்து திமுக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.