அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்ததா? – சட்டப்பேரவையில் சூடான வாதம்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா என்ற கேள்வியை முன்வைத்து, சட்டப்பேரவையில் இன்று கடும் விவாதம் நடைபெற்றது.
இன்றைய அவை அமர்வில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விவாதம் தொடங்கிய நிலையில், முதலில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, ஆளுநர் உரையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த குறிப்பிடும் இல்லாதது வருத்தமளிப்பதாக விமர்சித்தார். மேலும், தமிழ்நாடு போராடும் என திமுக கூறி வரும் சூழலில், தற்போது மாநிலம் முழுவதும் போராட்ட சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், பெரும்பாலான கோரிக்கைகள் — சுமார் 99 சதவீதம் — ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், சத்துணவு பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கான சில பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதை அவையிலேயே ஒப்புக்கொண்ட முதலமைச்சர், அவையும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
நீண்ட நேரம் விவாதம் நீடித்ததைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவாதத்தை நிறுத்தி வைத்த சபாநாயகர், அவையின் அடுத்த அலசல் பொருளுக்கு நகர்ந்தார்.