தாம்பரம் அருகே மாநகராட்சி குப்பை வாகன சக்கரம் கழன்று விபத்து அபாயம்
தாம்பரம் சானிடோரியம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிப்பு டிராக்டரின் சக்கரம் திடீரென கழன்று சாலையில் உருண்டு சென்ற சம்பவம், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் நிலையில், பாரதமாதா பிரதான சாலையில் சென்றுக் கொண்டிருந்த அந்த வாகனத்தின் ஒரு சக்கரம் திடீரென தனியே பிரிந்து ஓடியது.
இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த நேரத்தில் அருகில் இருந்த பள்ளி மாணவி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக தெரிவித்தனர். சில விநாடிகள் தாமதமாகியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் கூறினர்.
மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் மாநகராட்சிக்குச் சொந்தமானதாக இருப்பதால், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்களை போலீசார் பெரிதாக கவனிப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.