டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வாழ்த்து – அரசியல் ஒற்றுமை வலுப்பெறும் தருணம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்புடன் வரவேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தீய ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசை அடியோடு அகற்ற வேண்டும் என்றும், குடும்ப அரசியல் என்ற அவலத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் நிறுவும் நோக்குடன், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சி இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்புடன் வரவேற்பதோடு, மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல், மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு திமுக ஆட்சியின் பிடியிலிருந்து தமிழக மக்களை விடுவித்து, மாநிலத்தை மீட்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் நன்றி
இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனையே மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், அந்த இணைப்பை வரவேற்று வாழ்த்திய இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த அவர், தமிழக மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் அம்மாவின் நல்லாட்சியை, NDA தலைமையில் மீண்டும் அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து களத்தில் தீவிரமாக பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.