நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? – அண்ணாமலை கேள்வி
திமுகவும், ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற அரசியல் கட்சிகளும், நீதிபதி ஸ்ரீமதியை குறிவைத்து பதவி நீக்க தீர்மானம் ஒன்றை கொண்டு வருவார்களா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தேசிய பொறுப்பாளரான அமித் மால்வியாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களை கேள்வி எழுப்புவதோ, அதற்கு பதிலளிப்பதோ குற்றமாக கருத முடியாது என்றும், அத்தகைய வழக்குகள் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த நூற்றாண்டு காலமாக திமுக மற்றும் திராவிடர் கழகம் இந்து மதத்துக்கு எதிராக காட்டி வரும் விரோத மனப்பான்மையையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
வெறுப்பு பேச்சுக்கு காரணமான நபர்மீது தமிழ்நாட்டில் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதனை எதிர்த்தோ அல்லது கேள்வி எழுப்பியோ பேசியவர்கள் திமுக அரசின் ஒடுக்குமுறைக்கு இலக்காகினர் என்ற வெளிப்படையான அநீதியையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீதியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் செயல்களால் நாகரிக நம்பிக்கையை அழிக்க முடியாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக திமுகவும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவார்களா? என அவர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.