பொங்கல் பரிசுத் தொகுப்பு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்பில் தாமதம்
பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான கடைசி தேதியை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பை அதிகாரிகள் இதுவரை வெளியிடாமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் திருநாளின்போது பலர் சொந்த ஊர்களுக்கு செல்லாத காரணத்தால், அவர்கள் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால், மீதமுள்ள பயனாளிகளுக்காக பரிசுத் தொகுப்பு வழங்கும் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு உருவாகியுள்ளது.
இந்நிலையில், கால அவகாச நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரேஷன் கடை பணியாளர்கள், உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய இரு துறைகளின் அதிகாரிகளும் தேவையான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதால், இன்னும் பரிசுத் தொகுப்பைப் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் பணியில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டுவருவதாக தெரிவித்தனர்.