அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு!
அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனம் வழங்க லஞ்சம் பெற்றதாக அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் எழுந்துள்ளதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது முறையாக தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமலாக்கத் துறை (ED) தாக்கல் செய்த விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக மொத்தமாக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய ஊழல் வலையமைப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அரசு பணிகளைப் பெறவும், பணியிட மாற்றம் செய்யவும் அதிகாரிகள் ₹7 லட்சம் முதல் ₹1 கோடி வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஒன்று, தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பெரும் ஊழல்களை திட்டமிட்டு புறக்கணிப்பது; அல்லது மற்றொன்று, அந்த ஊழல்களில் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருப்பது என்றார்.
தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பினும், அமைச்சர் கே.என்.நேரு மீது இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடப்படாதது, திமுக அரசின் நிர்வாக சீரழிவை வெளிப்படையாக காட்டுகிறது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.