யூடியூப் ஆலோசனையை நம்பி எடை குறைக்க முயன்ற மாணவி உயிரிழப்பு – மதுரையில் சோக சம்பவம்
மதுரையில், இணையத்தில் வெளியான காணொளியைப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற கல்லூரி மாணவி உயிரிழந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் மீனாம்பாள்புரம் பகுதியில் வசித்து வந்த கலையரசி என்ற இளம்பெண், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். உடல் பருமன் குறித்த கவலையால், யூடியூபில் வெளியான “இணைவோம் இயற்கையுடன்” என்ற தலைப்பிலான காணொளியை அவர் பார்த்துள்ளார்.
அந்த காணொளியில் கூறப்பட்ட அறிவுரையை நம்பி, கடந்த 16ஆம் தேதி ‘வெங்காரம்’ எனப்படும் பாரம்பரிய மருந்துப் பொருளை வாங்கி உட்கொண்டுள்ளார்.
அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே, அவருக்கு கடும் வாந்தி, தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னரும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் பெற்ற காவல்துறையினர், உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை நம்பி, மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவித மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் மாணவியின் தந்தை கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.