மதுரை LIC அலுவலக தீ விபத்து: விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என அதிர்ச்சி தகவல்
மதுரை எல்.ஐ.சி அலுவலகத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்ட தீ விபத்து சம்பவம், உண்மையில் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி தெருவில் அமைந்துள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி திடீரென தீப்பற்றியது. இந்த சம்பவத்தில், மூத்த கிளை மேலாளராக பணியாற்றிய கல்யாணிநம்பி தீயில் சிக்கி உயிரிழந்தார். அதே நேரத்தில், உதவி நிர்வாக அதிகாரியான ராம் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, காயமடைந்த ராம் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன.
ராமின் பணியுடன் தொடர்புடைய சில ஆவணங்களில் முறைகேடுகள் இருப்பதை கல்யாணிநம்பி கண்டுபிடித்ததாகவும், அது குறித்து அவர் ராமை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வந்ததாகவும் தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில், ராம் முக்கிய ஆவணங்களை தீயிட்டு அழிக்க முயன்றுள்ளார்.
இதற்கிடையில், முறைகேடு குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்க கல்யாணிநம்பி முயன்றதை அறிந்த ராம், கடும் ஆத்திரத்தில் அவர்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், ராமை கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்