சிங்கம்புணரியில் சமூக ஊடக பிரபலம் ‘புத்தூர் பாண்டி’ கைது – கிளினிக்குக்கு சீல்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த நுட வைத்தியரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து, அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.
சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர், ‘புத்தூர் கட்டு பாண்டி’ என்ற பெயரில் தனியார் கிளினிக் நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் நேரலை நிகழ்ச்சிகள் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டோக்கன் பெற்று அவரிடம் மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னை 18 சித்தர்களில் ஒருவராக அறிமுகப்படுத்திய அவர், தனது உடலைத் தொட்டு வணங்கினால் நோய்கள் குணமாகும் என கூறி, தைலம் மற்றும் எண்ணெய் பாட்டில்களை நோயாளிகளிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, அரசு அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் அவரது வீடு மற்றும் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, காலாவதி ஆன தைலம் மற்றும் எண்ணெய் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் கிளினிக்கிற்கு சீல் வைத்து, நுட வைத்தியர் நெடுஞ்செழியனை கைது செய்தனர்.
மேலும், கிளினிக் நடத்துவதற்கான உரிமத்தில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர் உண்மையில் நுட வைத்தியரா என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.