திருவள்ளூரில் 7 மாத கர்ப்பிணியை தாக்கிய அரசியல் பிரமுகர் – வைரலாகும் வீடியோ
திருவள்ளூர் மாவட்டத்தில், பூஜைப் பொருட்கள் விற்பனை தொடர்பான வாக்குவாதம் காரணமாக, ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்களூர் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற கர்ப்பிணி பெண், தனது தாயுடன் இணைந்து வீரராகவ பெருமாள் கோயிலுக்கு அருகே சாலையோரத்தில் பூஜை உபகரணங்களை விற்பனை செய்து வருகிறார்.
அவர்களின் கடைக்கு அருகில் கடை நடத்தி வந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், பிரியதர்ஷினியின் கடையை அகற்றுமாறு அவமதிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர் கட்டையால் தாக்கியதில், பிரியதர்ஷினியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள புகழேந்தியை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கர்ப்பிணி பெண்ணை தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் பரவி, பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.