பிப்ரவரி 7 முதல் பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பெண்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட மாதாந்திர நிதி உதவி, வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மாஹே பிராந்தியத்தின் பல்லூர் பகுதியில் புதிய சமுதாய சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித் தொகை, பிப்ரவரி 7 முதல் நேரடியாக வழங்கப்படும் என உறுதிப்படுத்தினார்.
மேலும், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டார்.