பராமரிப்பற்ற பேருந்துகள் மூலம் மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து – திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
பழுதடைந்த அரசுப் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை திமுக அரசு அலட்சியப்படுத்தி வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து அது சாலையில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக வெளியான தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்ட அவர், தனியார் ஆம்னி பேருந்துகள் விதிக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை திமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், நெரிசல் இருந்தாலும் பாதுகாப்பு கருதி அரசுப் பேருந்துகளை நாடும் மக்களின் உயிரோடு, பராமரிப்பற்ற ஓட்டை உடைசல் வாகனங்கள் மூலம் விளையாடுவது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பேருந்து விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவைகளை புறக்கணித்து, பழைய கார்களை இயக்கி புகைப்பட நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசை, மக்கள் விரைவில் அரசியல் மேடையில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.