குடியரசு தின அணிவகுப்பு பயிற்சி – சென்னையில் மூன்று நாட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு
77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள உழைப்பாளர் நினைவுச் சின்னம் அருகே அணிவகுப்பு பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில், குடியரசு தினத்தன்று ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருகையை பிரதிபலிக்கும் வகையிலும், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நடைபவனி, கலாச்சார நிகழ்ச்சிகள், மேலும் குடியரசு தின விழாவில் முதலமைச்சர் வழங்கவுள்ள விருதுகள் தொடர்பான பயிற்சிகளும் நடைபெற்றன.
அதேபோல், பல்வேறு அரசு துறைகளின் சாதனைகள் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளின் அணிவகுப்பிற்கான பயிற்சியும் நடத்தப்பட்டது.
இந்த தொடர் ஒத்திகை நிகழ்ச்சிகளின் காரணமாக, மெரினா கடற்கரை பகுதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.