குடியரசு தின விழாவை பாதிக்க பயங்கரவாத சதி? – தமிழகத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு
வரவிருக்கும் குடியரசு தின கொண்டாட்டங்களை குழப்ப முயற்சி மேற்கொள்ளப்படலாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
இந்த முக்கிய நிகழ்வை குறிவைத்து பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.