மெட்ராசை சுற்றிப் பார்க்கலாம்: “சென்னை உலா பேருந்து” தரும் இனிய அனுபவம்
வெறும் 50 ரூபாய் கட்டணத்தில் சென்னையின் புகழ்பெற்ற அடையாளங்களை ஒரே பயணத்தில் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதுவும், பயணித்தபடியே நகரின் அழகையும் வரலாறையும் ரசிக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே “சென்னை உலா பேருந்து”.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமது பாரம்பரியமும் நகரின் அடையாளங்களும் புதிய தலைமுறையினரின் கவனத்திலிருந்து மெல்ல மறைந்து வருகிறது. அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாக, சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 16 முக்கிய இடங்களை ஒரே பயணத்தில் காணும் வகையில் இந்த உலா பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1970–80களின் வாழ்வியலை நினைவுபடுத்தும் விண்டேஜ் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பேருந்து, பயணிகளை கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது. சாதாரணம் முதல் ஏசி பேருந்துகள் வரை பழகிய மக்களுக்கு, பழைய மெட்ராஸை நேரில் சுற்றும் உணர்வை இது வழங்குகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பல்லவன் இல்லம் வரை, சென்னை சென்ட்ரல், பூங்கா ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவு சின்னம், தலைமை செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 16 முக்கிய இடங்களை சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த பேருந்து பார்வையிடச் செய்கிறது.
“Hop on – Hop off” முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் விரும்பும் இடத்தில் இறங்கி பார்வையிட்டு, 30 நிமிட இடைவெளியில் வரும் அடுத்த பேருந்தில் மீண்டும் ஏறி பயணத்தைத் தொடரலாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த சேவை, வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு முதன்முறையாக வரும் சுற்றுலா பயணிகளுக்கும், நகரின் பழைய முகத்தை மீண்டும் காண விரும்பும் மக்களுக்கும், சென்னை உலா பேருந்து ஒரு சிறந்த வழிகாட்டி என்றும், உண்மையான வரப்பிரசாதம் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.