ராமநாதபுரம் அருகே பெண் காவலரை வீடியோ எடுத்த விவகாரம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் அருகே, பெண் காவலர் ஒருவர் கழிவறையை பயன்படுத்திக் கொண்டிருந்த போது வீடியோ பதிவு செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரமக்குடியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை கடந்த 17ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த நேரத்தில் மணிநகர் சோதனைச் சாவடியில் உள்ள கழிவறையை பெண் காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, தனது கைப்பேசியில் வீடியோ எடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் காவலர், பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முத்துப்பாண்டியை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.