ஒரு குடும்பத்தின் மாத வருமானத்தை விழுங்கிய ஆம்னி பேருந்து கட்டணங்கள்
அதிக கட்டண வசூலின் மூலம் ஒரு குடும்பத்தின் முழு மாத வருமானமே ஆம்னி பேருந்துகளால் பறிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி காலத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டண அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரே பயணிக்காக ரூ.7,500 வரை வசூலிக்கப்பட்டதாக வெளியான தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அளவுக்கு மீறி உயர்வதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததும், வெறும் பெயருக்கு மட்டும் திமுக அமைச்சர்கள் கட்டண உயர்வை கண்டிப்பதும் வழக்கமான நிகழ்வாகி விட்டதாக அவர் விமர்சித்துள்ளார். இதனால் பொதுமக்களின் பணம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பண்டிகை நாள்களில் சொந்த ஊருக்குச் சென்று மீண்டும் திரும்ப நினைக்கும் நடுத்தர வர்க்க குடும்பங்களின் மாத சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணங்கள் மூலம் பறித்து, வேடிக்கை பார்க்கும் அறிவாலய அரசை, மக்களின் கோபமே விரைவில் வீழ்த்தும் என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.