கர்நாடக பக்தர்கள் மீது தாக்குதல் என்ற தகவல் பொய் – வதந்தி பரப்புவோருக்கு கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என தென்மண்டல காவல்துறை மறுத்துள்ளது. இவ்வகை தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிரதாரி எச்சரித்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி, கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் மீது ஒரு லாரி சிறிதளவு மோதியதில் லேசான விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முறையில் பிரச்னையை தீர்த்து அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலக் கொடி பொருத்திய வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழையும்போது தமிழர்கள் பிரச்னை செய்கிறார்கள் என சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி விஜயேந்திர பிரதாரி, சம்பவம் நடந்த அன்று பக்தர்கள் தங்களது பயணத்தை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த இடத்திலேயே பிரச்னை அமைதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
மேலும், சாதாரண விபத்தை பெரிதுபடுத்தி இரு மாநில மக்களிடையே பதற்றம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.