உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
உழவர் திருநாளான பொங்கல் தினத்திலும் கூட, தமிழக அரசு எந்தவித சங்கோஜமும் இல்லாமல் மாநிலம் முழுவதும் மதுவை ஊற்றி விட்டதாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம்” என்று உருக்கமாக காணொளி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், இந்தப் பொங்கல் பண்டிகைக்காலத்தில் மட்டும் ரூ.518 கோடிக்கும் மேலான மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்பது ஒரு விநோதமான முரண்பாடு என சாடியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, மதுவாடை இல்லாத ஒரு பண்டிகை கூட தமிழகத்தில் நடைபெறவில்லை எனக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை பல மடங்காக உயர்த்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 வழங்கப்படுவதாக ஊரெங்கும் விளம்பரம் செய்துவிட்டு, அதே பணத்தை டாஸ்மாக் மூலமாகவே மீட்டெடுத்துள்ள திமுக அரசின் ‘திறமையை’ நினைத்தால், அந்த பணம் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்களும், டாஸ்மாக் மூலம் வசூலான ரூபாய் நோட்டுகளின் எண்களும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் வந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை எனவும் அவர் கேலி செய்துள்ளார்.
மக்களின் மகிழ்ச்சியைவிடவும், மனநிம்மதியைவிடவும், போதையால் சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளை கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், டாஸ்மாக் வருவாயையே முதன்மைப்படுத்தும் இப்படியான அரசு, இனி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தை ஆளக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.