ஆளுநரை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா – ஊடக விவாத வன்முறை தொடர்பான காணொளிகள் ஒப்படைப்பு
ஊடக விவாத நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்த காணொளி ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் தன்னை தாக்கிய திமுக ஆதரவாளர்கள் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், சம்பவத்துடன் தொடர்புடைய பாஜக தொண்டர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என விமர்சித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான முழுமையான காணொளி ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், இதுகுறித்து மாநில அரசிடம் விரிவான நிலை அறிக்கை கோரப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாகவும் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார்.