போட்டி தாமதம் – 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்படாததால் சர்ச்சை
பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக தொடங்கியதன் விளைவாக, பல காளைகள் அவிழ்க்கப்படாமல் போனது பெரும் அவலமாக மாறியது. அவிழ்க்கப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுகள் வழங்கப்படாததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்ட இந்த போட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாமதமாக வருகை தந்ததால், 9 மணிக்குப் பிறகே தொடங்கியது.
வாடிவாசல் வழியாக களமிறங்குவதற்காக ஆன்லைன் முறையில் ஆயிரம் காளைகள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், நேர தாமதம் காரணமாக 100க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்படாமல் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அவிழ்க்கப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என விழா குழுவினர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாக பரிசுப் பொருட்கள் வழங்கப்படாமல், அவை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கோபமடைந்த பல காளை உரிமையாளர்கள், பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு அதில் ஏறி, தங்களுக்குப் பிடித்த பரிசுகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.