தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் நிறுவல்
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று பீகார் மாநிலம் கேசரியா நகரில் முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 210 டன் எடை கொண்ட இந்த அபூர்வமான சிவலிங்கம், ஒரே பெரிய பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய சிற்பக் கலைஞர்கள் இந்தச் சிற்பத்தை மிகுந்த நுட்பத்துடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த சிவலிங்கத்தின் சிறப்பு என்னவெனில், அதில் 1008 சிறிய சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இது “சஹஸ்ரலிங்கம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்திலிருந்து 96 சக்கரங்கள் கொண்ட மிகப்பெரிய லாரியில் ஏற்றப்பட்ட இந்த சிவலிங்கம், சுமார் 2,800 கிலோமீட்டர் தூரத்தை கடந்து,
47 நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு கடந்த 5ஆம் தேதி பீகார் மாநிலத்தின் கேசரியா நகரை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, கேசரியா நகரில் அமைந்துள்ள விராட் ராமாயண ஆலயத்தில் சிவலிங்கம் பக்தி பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்து வழிபட்டனர்.