கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு – கம்பீர நடைப்போட்ட காளை பார்வையாளர்களை கவர்ந்தது
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியைச் சேர்ந்த அஜித் சாம்பியன் பட்டம் வென்று முதலிடத்தை கைப்பற்றினார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய பாலமேடு ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டும் மிகுந்த சிறப்புடன் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும் களத்தில் குவிந்திருந்த நிலையில், துணை முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு போட்டி சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின், ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இசை, நடனத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட கோயில் காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் விழாக் குழுவினரால் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட போது, அவற்றை பிடிக்காமல் வீரர்கள் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.
இரண்டாம் சுற்றில் களமிறங்கிய நடிகர் சூரியின் காளை யாரிடமும் பிடிபடாமல் சீறி ஓடியது. அதன் வேகமும் வீரமும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேபோல், யாராலும் அடக்க முடியாத “பில்கேட்ஸ்” என்ற காளை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியின் இறுதி சுற்று முடிவில், அஜித் மற்றும் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தலா 16 காளைகளை அடக்கி சமமாக முன்னிலை பெற்றனர். பின்னர் விழா குழுவின் முடிவின் பேரில் அஜித் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பெற்ற பிரபாகரனுக்கும், மூன்றாம் இடம் பிடித்த கார்த்திக்குக்கும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதற்கிடையே, கோச்சடையைச் சேர்ந்த விக்கி என்பவரின் காளை கம்பீரமாக நடைபோட்டபடி களத்தில் வந்தது. அதனை நெருங்க முடியாமல் வீரர்கள் திகைத்து நின்றனர். இந்த காளை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
அதேபோல், குலமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் காளை யாரிடமும் பிடிபடாததால் ‘சிறந்த காளை’ என அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் சிறந்த காளையாக தேர்வான கைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வனின் காளைக்கு, கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.