2026ல் தமிழகத்திற்கு வெளிப்படையான, நம்பகமான வளர்ச்சி கூட்டணி – பொன்.ராதாகிருஷ்ணன்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தெளிவான கொள்கைகளையும் நேர்மையான நிர்வாக அணுகுமுறையையும் கொண்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கூட்டணி உருவாகியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.
இதையொட்டி, பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், இந்த கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 2026ல் தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த கூட்டணி தூய்மையும் நேர்மையும் கொண்டதாகவும், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தும் கூட்டணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.