தேசிய கீதத்திற்குப் பின் தமிழ்தாய் வாழ்த்து பாட வலியுறுத்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ஆர் – நெகிழ்ச்சி சம்பவம்
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ஒரு தன்னார்வ அமைப்பின் விழாவில், தேசிய கீதம் முடிந்த உடன் தமிழ்தாய் வாழ்த்தையும் பாட வேண்டும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில், SNR சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழாவும், ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 25வது ஆண்டு வெள்ளி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை மற்றும் பல் மருத்துவக் கல்லூரியின் புதிய இலச்சினைகளை வெளியிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சிறப்பாக சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சி ஆரம்பத்தில் தேசிய கீதம் பாடப்பட்டாலும், தமிழ்தாய் வாழ்த்து இடம்பெறவில்லை. இதனை கவனித்த குடியரசு துணை தலைவர், உடனடியாக தமிழ்தாய் வாழ்த்தையும் பாடுமாறு அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தலின் பேரில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இந்த செயல், அரங்கில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருந்தினர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.