கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொல்லிமலையில், பழங்குடியினர் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். பெரியகோம்பை புதூர் உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு 108 பொங்கல்கள் வைத்து சிறப்பாக விழா நடத்தினர்.
வீடுகளின் முன்பாக பொங்கல் பானைகளை வரிசையாக அமைத்து, கரும்பு, மஞ்சள் அலங்காரங்களால் தோரணைகள் கட்டி, மலைவாழ் பெண்கள் பாரம்பரிய புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பழங்குடி மக்களின் அடையாளமாக விளங்கும் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கொல்லிமலைக்கு உரிய கும்மி பாடல்களைப் பாடியும், பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர்.