மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் எடுத்துச் சென்ற தந்தை – நெகிழ வைத்த நிகழ்வு
பொங்கல் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு முதியவர் தனது மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் எடுத்துச் சென்ற சம்பவம் அனைவரின் மனதையும் உருக்கி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கு சுந்தராம்பாள் என்ற மகள் உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகளுக்கு குழந்தை பிறந்ததிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பொங்கல் பண்டிகை காலத்தில் மகளுக்கு சீர் வழங்கி வருவதை அவர் ஒரு மரபாகக் கடைப்பிடித்து வருகிறார்.
அந்த வரிசையில், இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு 12-ஆவது முறையாக செல்லத்துரை மகளின் இல்லத்திற்குச் சீர் கொண்டு சென்றார். ஐந்து கரும்புகளைத் தலையில் சுமந்தபடியும், பல்வேறு வகையான சீர் பொருட்களை சைக்கிளில் ஏற்றியபடியும், சுமார் 17 கிலோமீட்டர் தொலைவை அவர் கடந்து சென்றது, பார்ப்பவர்களை உருக்கச் செய்தது.
தமிழரின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளின் மதிப்பும் மங்காமல் நிலைத்திருக்க காரணமாக இருக்கும் செல்லத்துரையை பாராட்டி, கொத்தக்கோட்டை பகுதி வர்த்தகர்கள் சார்பில் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டது.