தவெகவை தீவிர அரசியல் கட்சியாக கருதவில்லை – குருமூர்த்தி கருத்து
தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஒரு முக்கியமான அல்லது தீவிர அரசியல் கட்சியாக தாம் பார்க்கவில்லை என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சனமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் நிறுவனத்தின் 56வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த குருமூர்த்தி, மகாராஷ்டிராவில் வெற்றியை உறுதி செய்த அமித்ஷா தற்போது தமிழக அரசியலிலும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுந்தபோது, அவரைச் சுற்றி இருப்பது ஒரு கூட்டமே தவிர உறுதியான அரசியல் கட்டமைப்பு அல்ல எனக் கூறிய குருமூர்த்தி, அந்த கட்சியை சீரியஸான அரசியல் இயக்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், விஜய் முதல்வராக வருவார் என்ற பேச்சு முற்றிலும் பொருளற்றது என்றும் தெரிவித்தார்.