அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம்
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், வலையங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன் முதலிடத்தை கைப்பற்றினார். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.
17 காளைகளை அடக்கி சிறப்பாக செயல்பட்ட அவனியாபுரம் கார்த்தி, இரண்டாவது இடத்தைப் பெற்று, இருசக்கர வாகனத்தை பரிசாக பெற்றார். இதேபோல், 16 காளைகளை கட்டுப்படுத்திய அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், மூன்றாவது இடத்தில் இடம்பிடித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட மொத்தம் 60 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 11 பேருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டியில் சிறந்த காளையாக விருமாண்டி பிரதர்ஸ் வளர்த்த காளை தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.