வங்காநரி வேட்டைக்கு தடை – வனத்துறை விழிப்புணர்வு போஸ்டர் இணையத்தில் வைரல்
வங்காநரியை பிடிப்பதற்கு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றுள்ளன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து, குலதெய்வமாக வழிபட்டு பின்னர் மீண்டும் வனத்திற்குள் விடுவது ஒரு பாரம்பரிய நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வங்காநரியை பிடிப்பது கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதிகளில் கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை முன்புபோல் கொண்டாடாமல் இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், “வங்காநரியை பாதுகாப்போம், வாழவிடுவோம்” என்ற கருத்தை வலியுறுத்தி, வனத்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பேளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, அரசு பேருந்துகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன