மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது
திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் இருந்த நிலையில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலரை தாக்கியதாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அம்பிகா என்ற பெண் காவலர், பாலகரை பகுதியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பதற்காக காவலர் அம்பிகா உதவ முயன்றார். விசாரணையின் போது, அவர்கள் மதுபோதையில் இருப்பது தெரிய வந்ததால், வாகனத்தின் சாவியை அவர் கைப்பற்றினார்.
இதனால் கோபமடைந்த ஜெகதீஷ் என்பவர், பெண் காவலர் அம்பிகாவின் கையை கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. கடும் வலியால் அவர் அவதிப்பட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தலையிட்டு, இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் முசிறி பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் ஜெகதீசன் என்பவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.