தமிழ் மண்ணில் பொங்கலை கொண்டாடிய அனுபவம் பெரும் மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை ஐஐடி வளாகத்தில் உற்சாகமும் பாரம்பரியமும் நிறைந்த வகையில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களின் பாரம்பரிய ஆடை அணிந்து கலந்து கொண்டார்.
ஐஐடி மெட்ராஸ், முத்தமிழ் மன்றம் மற்றும் ஊழியர் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பொங்கல் விழாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐஐடி இயக்குநர் காமகோடி, நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழர் மரபுக்கு ஏற்ப வேட்டி–சட்டை அணிந்து வந்த அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் பம்பை வாத்திய இசையுடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
ஐஐடி குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய அவர், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அமைச்சர், “அனைவருக்கும் வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என தமிழில் உரையைத் தொடங்கினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகை பல விதமான முறைகளில் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதுவரை தாம் நேரடியாக பொங்கல் விழாவில் பங்கேற்றதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இதற்கு முன் உரையாற்றிய ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி வரலாற்றில் மத்திய அமைச்சர் ஒருவர் பொங்கல் விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தின் நிலைத்த வளர்ச்சிக்கு இந்தியா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இன்று உலக நாடுகளுக்கே ஏற்பட்டுள்ளதாகவும் காமகோடி தனது உரையில் குறிப்பிட்டார்.