விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் – அண்ணாமலை பேச்சு
விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும், சஷ்டி விரதம் போன்ற ஆன்மிக மரபுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அண்ணா திடலில் பாஜக சார்பில் இளைஞர் எழுச்சி மாநாடு மற்றும் சுவாமி விவேகானந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணாமலை, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார்.
இந்த விழாவில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, இன்றைய இளைஞர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், விரதம் இருப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்றும், சஷ்டி விரதம் போன்ற பாரம்பரிய ஆன்மிக வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆன்மிகம், ஒழுக்கம் மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகியவை மனித வாழ்க்கையை சீராக நடத்த உதவும் எனவும் அண்ணாமலை கூறினார்.
செல்போன் பயன்பாடு அளவுக்கு அதிகமாக இருப்பது இளைஞர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற செல்போன் பயன்பாட்டை தவிர்த்து, சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.
இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதால், உடல் ஆரோக்கியம், மன உறுதி மற்றும் பண்பாட்டுச் சிந்தனையுடன் வளர வேண்டும் என்றும், அத்தகைய வாழ்க்கை முறைதான் தனிநபரையும் சமூகத்தையும் முன்னேற்றும் என்றும் அண்ணாமலை தனது உரையில் தெரிவித்தார்.