போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி
பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட பகுதி நேர ஆசிரியர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டு வானகரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ஆசிரியர் திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என தெரிய வந்துள்ளது. அவர் ஒரு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.