கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை
காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தினசரி கைது செய்து, திமுக அரசு தனது அதிகார போக்கை வெளிப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் 7 நிர்வாகிகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத செயல்பாட்டிற்கு தெளிவான உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன், “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்கப்படும் என திமுக அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது நிர்வாக தோல்வியை மறைக்க காவல்துறையை பயன்படுத்தி ஆசிரியர்களை மிரட்டுகிறார் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்து அவர்களின் குரலை அடக்க முடியும் என நினைப்பது வெட்ககரமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் தளர்ந்து விடும் என திமுக கருதுவது, ஜனநாயகத்தை அந்த கட்சி எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறது என்பதற்கான சாட்சியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு, தமிழக மக்கள் விரைவில் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.