பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அறிவிக்கப்பட்ட சேலை கிடைக்காததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கத் தொகை, சர்க்கரை, கரும்பு, வேட்டி மற்றும் சேலை அடங்கிய பரிசுப் பெட்டி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல ரேஷன் கடைகளில் சேலை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், பரிசுத் தொகுப்பு பெற வந்த மக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சேலையை தவிர மற்ற பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் சேலை முறையாக வழங்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் நாளன்றே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால், அவர்களும் பரிசுத் தொகுப்பை பெற வசதியாக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.