நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.காந்தி, தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் அரசின் உத்தரவுப்படி காவல்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஜனநாயக முறையில் போராட்டத்திற்கு அனுமதி கோரினாலும், அதனை காவல்துறை திட்டமிட்டு மறுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.