100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்படவில்லை – எதிர்க்கட்சிகள் தவறான தகவல் பரப்புகின்றன
சிவகாசி அருகே உள்ள மங்களம் கிராமத்தில், ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, புதுப்பானைகளில் பொங்கல் வைத்து பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய பென்டகன் பாண்டுரங்கன், இந்தியாவின் பாரம்பரியமும் கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.